'ஜின்' திரைப்பட விமர்சனம்

சென்னை,
மலேசியாவில் இசைக்கலைஞராக இருக்கும் முகேன், அங்குள்ள கடையில் ‘ஜின்’ என்று சொல்லக்கூடிய ஒரு பேயை வளர்ப்பு பிராணியாக பெட்டிக்குள் அடைத்து வாங்கிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு பவ்யா திரிகாவுடன் காதல் கைகூடி திருமணம் நடக்கிறது. ‘லாட்டரி’யில் பரிசு விழுகிறது. அனைத்துக்கும் ‘ஜின்’ பேய் தான் காரணம் என்று நம்புகிறார்.
அதேவேளை சில அசம்பாவிதங்களால் குடும்பத்தினர் ‘ஜின்’ பேயை வெறுக்கிறார்கள். ஒருகட்டத்தில் பவ்யாதிரிகா வீட்டில் ரத்தகாயத்துடன் கிடக்க, அதிர்ச்சியடையும் குடும்பத்தினர் அந்த பெட்டியை தூக்கி எறிகிறார்கள். ஆஸ்பத்திரியில் இருக்கும் பவ்யாதிரிகாவை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த மர்ம கும்பல் கொலைவெறியுடன் சுற்றுவது எதனால்? பேயின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை.
முகேன் இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். ‘ஜின்’ பேய் அவருக்குள் செல்லும்போதெல்லாம் ஆக்ரோஷமான நடிப்பை கொட்டியுள்ளார். ரசகுல்லா மேனியால் பவ்யாதிரிகா கவருகிறார். ‘குட்டிமா’ பாடலுக்கு குதூகலமான ஆட்டம் போட்டுள்ளார்.
வில்லனாக ராதாரவி மிரட்டியுள்ளார். நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, வினோதினி, இமான் அண்ணாச்சி, பால சரவணன், ரித்விக், பேயை அடக்கும் மந்திரவாதி கயல் தேவராஜ் என அனைவரின் நடிப்பும் நிறைவு. அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிப்பு. விவேக் மெர்வின் இசை ஆறுதல். பேயை வளர்ப்பு பிராணியாக காட்டும் புதுமையான கதைக்களம் கவனிக்க வைத்தாலும், பேய் பேசும் வசனங்களில் சலிப்பு தட்டுகிறது.
திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். பொழுதுபோக்கு என்ற அம்சத்தை வலுவாக கொடுத்து, குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் பேய் படமாக படத்தை இயக்கி கவனம் ஈர்க்கிறார், டி.ஆர்.பாலா.
ஜின் – மயக்கம் குறைவு.