ஜாய் கிரிசில்டா புகார்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் சம்மன்

தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, அக்டோபர் 22-ந்தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதும், தனது புகாரை விசாரிக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். தனது வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா உடன் மாநில மகளிர் ஆணையத்துக்கு சென்ற ஜாய் கிரிசல்டா, தனது தரப்பு விளக்கங்களை தெரிவித்தார்.
இந்நிலையில், புகார் தொடர்பாக நாளை (அக்டோபர் 15)நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்டா இருவருக்கும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.