ஜப்பானில் வசூல் வேட்டையாடி வரும் “வேட்டையன்”

ஜப்பான் நாட்டில் தமிழ் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அதிலும் ரஜினிகாந்த் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அந்தவகையில் ‘முத்து’, ‘கபாலி’, ‘தர்பார்’, ‘எந்திரன்’ போன்ற படங்கள் ஜப்பானில் வசூல் வேட்டை நடத்தின.குறிப்பாக முத்து படம் ரூ.23½ கோடி வசூலை குவித்தது.
ரஜினிகாந்தின் படங்கள் ரிலீசின்போது, ஜப்பானில் இருந்து ரசிகர் கூட்டம், இந்தியா வந்து, குறிப்பாக சென்னை வந்து படம் பார்த்து ரசித்து செல்வதும் வழக்கம். அந்தவகையில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிகண்ட ‘வேட்டையன்’ படம், கடந்த வாரம் ‘புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் ஜப்பானில் திரையிடப்பட்டது. இதற்கு அந்நாட்டு ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாக கிடைத்து வருகிறது.
இதுவரை ‘வேட்டையன்’ படத்துக்கு 48 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வசூல் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் அதிக வசூல் குவித்த படம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகும். இதன் வசூல் ரூ.136¼ கோடி ஆகும்.