‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | ‘Jananayagan’ release postponed

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | ‘Jananayagan’ release postponed



சென்னை,

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ரசிகர்களின் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்திடம் 2025 டிசம்பர் 18-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்த பிறகு, டிசம்பர் 22-ந்தேதி எங்களுக்கு வந்த மின்னஞ்சலில், ஒரு சில மாற்றங்களுடன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தணிக்கை குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்களை செய்த பிறகு, படத்தை நாங்கள் மீண்டும் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பித்தோம். படத்திற்கு விரைவில் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வந்த சூழலில், 2026 ஜனவரி 5-ந்தேதி மாலை எங்களுக்கு வந்த தகவலின்படி, ஒரு புகாரின் பேரில் ‘ஜனநாயகன்’ படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்தவர் யார் என்பது தெரியாத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வந்துவிட்டதால் நாங்கள் ஐகோர்ட்டை அணுகினோம்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க காலை உத்தரவிட்டது. ஆனால் தணிக்கை வாரியம் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்தது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டோம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் எவ்வளவு முயன்றும் எங்களால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த படத்திற்காக வருடக்கணக்கில் உழைத்த அனைவருக்கும் இது மிகவும் கடினமான நேரம். அனைத்திற்கும் மேல், ரசிகர்களின் அன்பையும் பெற்ற விஜய்யை மிகுந்த மரியாதையுடன் திரைத்துறையில் இருந்து வழியனுப்ப வேண்டும் என்று நம்புகிறோம்.

ரசிகர்களின் பொறுமை, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையே எங்களுக்கு சக்தியை வழங்குகிறது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *