''சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'' – சினிமா விமர்சனம்

சென்னை,
காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு, தனது வீட்டில் கொள்ளையடிக்குமாறு லிவிங்ஸ்டனை அவரது முதலாளியான ஹுசைனி கேட்கிறார். இதையடுத்து தனக்கு நெருக்கமான வைபவ் மற்றும் மணிகண்டனை வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகிறார் லிவிங்ஸ்டன்.
கொள்ளையடித்த பணம்-நகைகளை மதுக்கடையில் வைபவ் மற்றும் மணிகண்டன் தொலைக்கிறார்கள். உயிர் பயத்தில் கிங்ஸ்லியின் உதவியை நாடுகிறார்கள். இதையடுத்து சென்னையின் பழைய குற்றவாளிகளான ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரனிடம் அவர்களை அழைத்துச் செல்கிறார் கிங்ஸ்லி.
அனைவரும் கூட்டாக ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அது தோல்வியில் முடிய, அடுத்தகட்டமாக வங்கியில் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக மிகப்பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். அது நடந்ததா, இல்லையா? என்பதே கதை.
ஜாலியான கதாபாத்திரத்தில் வைபவ் கலகலப்பூட்டுகிறார். அவருக்கு துணையாக மணிகண்டன் வருகிறார். அதுல்யா ரவி இளமை துள்ளலாக வந்து போகிறார்.
ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஜான் விஜய் மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி கூட்டணியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. வயிறு குலுங்க சிரிக்கலாம் என்று நினைத்தால் ஏமாற்றம்தான். லிவிங்ஸ்டன், ஹூசைனி என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு நிறைவு சேர்த்துள்ளனர்.
டிஜோ டாமியின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் ஓ.கே. ரகம். காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தாலும், அழுத்தமில்லாத திரைக்கதை சலிப்பை தருகிறது. இரண்டாம் பாதியில் வேகம் குறைவு.
நகைச்சுவை என்பதை மட்டும் இலக்காக கொண்டு, முழு நீள பொழுதுபோக்கு படத்தை இயக்கியுள்ளனர் அருண் ராஜேஷ்வர், அருண் கேசவ்.