சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் அலுவலத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

சென்னை,
பூடான் நாட்டில் உயர் ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் பிரபலங்களுக்கும் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டதாக கூறி சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் களமிறங்கினர். இந்த கார்கள் விற்பனையில், மலையாள முன்னணி நடிகர்களான பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் (மம்முட்டியின் மகன்) ஆகியோரது பெயர்களும் அடிபட்டது. இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள இருவரது வீடுகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இருவரது அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலையில் இருந்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட மொத்தம் 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மானின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடைபெற்றது. அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லேண்ட் க்ரூசர், டிபெண்டர், மசெரட்டி போன்ற ஆடம்பர சொகுசு கார்களை சட்டவிரோதமாக பூடானில் இருந்து நேபாளம் வழியாக இறக்குமதி செய்து பதிவு செய்து நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. கோவையிலும் சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் நேற்று தொடங்கிய பல மணி நேரம் நீடித்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சோதனையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.