சூர்யா பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்

சென்னை,
தமிழ் சினிமாவில் நானும் ரௌடி தான் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. அதைத் தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா, வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படும்நிலையில், தற்போது மற்றொரு வேடத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ‘சூர்யா 45’ படத்திற்கான இசைப் பணியில் சாய் அபயங்கர் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியுடன் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கிட்டத்தட்ட இந்த படமானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகை திரிஷா, இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்துவிட்டார் என்றும் தகவல் வெளியானது. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘வேட்டை கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டியில் சாய் அபியங்கர் “சூர்யா 45 படத்தின் இசையமைக்கும் பணிகள் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது. சூர்யா சாரை சின்ன வயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு பேன் பாய் சம்பவமாக இருக்கும். ஏ. ஆர்.ரகுமான், அனிருத்துடன் நான் முன்பு வேலை செய்திருப்பதால் எனக்கு பிஜிஎம் பண்றது மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாய் அபியங்கர் சூர்யா 45 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். சூர்யா 45 படத்தின் டீசர் சில நாட்களில் வெளியாக உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.