சுயசரிதை எழுதும் நடிகர் ரஜினிகாந்த்| Actor Rajinikanth writing his autobiography

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 14-ல் திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்நிலையில், தனியார் ஊடகத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில்,கூலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது அவரது சுயசரிதையை எழுதுவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், படப்பிடிப்பின்போது நாள்தோறும் நடிகர் ரஜினிகாந்திடம், அவரது சுயசரிதையில் எந்த அத்தியாத்தைத் தற்போது எழுதி வருகிறார், என கேட்டுத் தெரிந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர்கள் சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் “கூலி” திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 50 வருடங்களை சினிமாவில் நெருங்கியுள்ளார். தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2ம் பாகத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இதன் பின்னர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வருடங்களுக்கு முன்பே ரஜினி சுயசரிதை எழுத முயற்சி செய்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அதனை கைவிட்டார். இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சுயசரிதை எழுதும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.