சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு

கொச்சி,
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோருக்கு கேரள மாநிலம் கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. கொச்சியில் உள்ள இருவரின் வீடுகளிலும் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூடான் வழியாக இந்தியாவுக்கு வரி செலுத்தாமல் காரை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினர்.
பூட்டானில் உயர்ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்துள்ளனர். நடிகர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது. இது மத்திய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் “சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்
2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார். துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.