சிவகார்த்திகேயனின் “மதராஸி” முதல் நாள் வசூல் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சென்னை,
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘மதராஸி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூமேனன், ‘டான்சிங் ரோஸ்’ சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தமிழ் படம் ‘மதராஸி’ என்பதால், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மொத்தம் 62.22 சதவீத தியேட்டர்களில் இப்படம் வெளியானது. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ரசிகர்களை ‘மதராஸி’ ஈர்த்த போதிலும், கர்காடக ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். அதே நேரத்தில், மும்பை, டெல்லியில் ஓரளவு ரசிகர்களை இப்படம் கவர்ந்து இழுத்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சியில் ‘மதராஸி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.12.8 கோடி வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.