சிறையில் படுக்கை, தலையணை கேட்ட நடிகர் தர்ஷன்.. நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவரது கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைவாசம் அனுபவிக்கும் தர்ஷன் தனக்கு படுக்கை, தலையணைகள் கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், படுக்கை, தலையணைகள் வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும், தர்ஷனுக்கு படுக்கை, தலையணைகளை வழங்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது. இதனால் சிறை நிர்வாகத்திற்கு எதிராகவும், தனக்கு படுக்கை, தலையணைகள் வழங்க உத்தரவிடும்படி கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு நேற்று நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “சிறை விதிமுறைகளின் படியும், கோர்ட்டு உத்தரவின் படியும் தர்ஷனுக்கு என்னவெல்லாம் சலுகைகள் வழங்க வேண்டுமோ, அதனை கொடுத்துள்ளோம். அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து கோர்ட்டில் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. சிறைத்துறையின் விதிமுறைகளை மீறி வேறு எந்த சலுகைகளும் வழங்க சாத்தியமில்லை” என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “சிறை நிர்வாகம் சொல்வது போல் தர்ஷனுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. சிறைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சந்தர்ப்பத்தில் தான் சிறைக்குள் தனிமைப்படுத்தும் அறையில் கைதிகள் அடைக்கப்பட்டனர். தற்போது தர்ஷனும் அங்கேயே அடைக்கப்பட்டு உள்ளார். மற்ற கைதிகள் போல் தனிமைப்படுத்தும் அறையில் இருந்து தர்ஷனை மாற்ற வேண்டும்” என்றார்.
மேலும் அவர் வாதிடுகையில், கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், அதனை சிறை நிர்வாகம் மீறியுள்ளது. எனவே தர்ஷனுக்கு படுக்கை, தலையணைகள் வழங்க உத்தரவிட வேண்டும், என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.