சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ஜாக்கி சான்!

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ‘தக்லைப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49-வது படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அஷ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதையடுத்து மலையாளத்தில் ‘2018’ எனும் ‘ஹிட்’ படத்தை கொடுத்த ஜூட் ஆண்டனி இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். இவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஜாக்கி சான் சிம்புவின் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.