சிம்புவின் “அரசன்” பட புரோமோ திரையரங்குகளில் வெளியானது

சென்னை,
சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் புரோமோ வீடியோ இன்று (16ந் தேதி) மாலை 06.02 மணியளவில் தியேட்டர்களிலும், நாளை (17ந் தேதி) காலை 10.06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
புரோமோ விடியோ குறித்து நடிகர் சிலம்பரசன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “வெற்றி மாறன் சாரின் அரசன் புரோமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன்.. நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..” என்று கூறியுள்ளார். சிலம்பரசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் தாணு, “அரங்கம் அதிர.. ஆர்ப்பாட்டம் தொடர.. இனிதே கொண்டாடுவோம்..” எனக் குறிப்பிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், சிம்பு இளவயது தோற்றத்தில் முகம் முழுக்க ரத்தத்துடன் இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதையும் உறுதி செய்துள்ளனர்.. இது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் புரோமோ திரையிடப்பட்டது. இந்த புரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அரசன் பட புரோமோ நாளை காலை 10.07 மணிக்கு யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.