சினிமா விமர்சனம்: ராகு கேது | rahu ketu movie Review

நவ கிரங்களில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின? என்பதை சொல்லும் கதை.
அசுரர்களுடனான மோதலில், நிறைய இழப்புகளை சந்திக்கும் தேவர்கள் நாரதரின் துணையுடன் விஷ்ணுவிடம் உதவி கேட்கிறார்கள். விஷ்ணுவின் யோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலில் சஞ்சீவி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிராகவும் கொண்டு கடைய அமுதம் கிடைக்கிறது.
அப்போது மோகினி அவதாரம் எடுக்கும் விஷ்ணு, தந்திரத்தால் தேவர்கள் மட்டும் அமுதம் பருகும்படி செய்கிறார். இதில் அசுர குல இளவரசன் சுபர்பானு தேவர் வேடத்தில் அமுதம் அருந்திட, அவரை வதம் செய்ய முடிவு செய்கிறார் விஷ்ணு.
அதன்பிறகு என்ன நடந்தது? ராகு, கேது எப்படி உருவானார்கள்? அவர்கள் மனித வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் என்ன? என்பதே கதை.
இதுவரை படங்களில் ‘அட்வைஸ்’ மட்டுமே கூறிய சமுத்திரக்கனி, சிவனாக அருள்பாலித்து ஆச்சரியம் தருகிறார். விக்னேசின் சாந்தமான முகம் விஷ்ணு கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறது. கஸ்தூரியை அம்மனாக பார்ப்பது அதிசயமே. எப்படி தனது வாய்க்கு பூட்டு போட்டாரோ…
சுபர்பானுவாக வரும் துரை.பாலசுந்தரம், நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். சண்டை காட்சிகளிலும் ஆக்ரோஷம். சாதனா சங்கர், ஜெயசீலன், ஆனந்த், ரவிகுமார், கிரிஷ் வெங்கட், திருமாறன், சிவராமன், கவுசிகா, அர்ச்சனா, சந்தியாஸ்ரீ, உடுமலை ரவி, சிங்கராஜா, பழனி ஆகியோரும் வந்துபோகிறார்கள்.
மோகன் பிரசாந்தின் ஒளிப்பதிவும், சதா சுதர்சனத்தின் இசையும் ஓகே ரகம். கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
படம் முழுக்க பேசப்படும் தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு பாராட்டுகள். திரைக்கதையில் கவனம் தேவை. தேவர்களாக நடித்தவர்களை எங்கிருந்து பிடித்தீர்கள்?
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் முழு நீள புராண கதையை, அதுவும் ஆடி மாதத்தை குறிவைத்து திரைப்படமாக கொடுத்திருக்கிறார், இயக்குனர் துரை.பாலசுந்தரம்.
ராகு கேது – கருணை காட்டட்டும்.