சினிமா விமர்சனம்: நாளை நமதே

நாளை நமதே
நடிகர்கள் | மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா |
இயக்குநர் | வெண்பா கதிரேசன் |
இசை | வி.ஜி.ஹரிகிருஷ்ணன் |
ஒளிப்பதிவு | பிரவீன் |
படத்தொகுப்பு | ஆனந்த லிங்க குமார் |
திரை விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. அப்போது பெரிய கலவரம் ஏற்பட, தனி தொகுதியான அந்த தொகுதி மீண்டும் பொது தொகுதியாக மாறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தனி தொகுதியாக மாறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மதுமிதாவுக்கு, பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன.
அனைத்தையும் கடந்து, தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கும் மதுமிதா சந்தித்த சோதனைகள் என்ன? அவர் நினைத்தது போல் தேர்தல் நடந்ததா? அவர் வெற்றி பெற்றாரா? என்பதே மீதி கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, மண் சார்ந்த முகமாகவும், போராட்ட நடிப்பாலும் கவருகிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அருமையாக கையாண்டிருக்கும் மதுமிதாவின் துடிப்பான நடிப்புக்கு விருது நிச்சயம்.
வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக நடித்த நடிகர்-நடிகைகள் என அனைவரும் மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் கதைக்களத்தையும், கதை மாந்தர்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வலிமை சேர்க்கிறது.
எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் பலவீனம். இரண்டாம் பாதியில் லேசான சலிப்பு தட்டுகிறது. இட ஒதுக்கீடு மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு அரசியலில் உள்ள நெருக்கடிகளை எதார்த்த காட்சிகள் மூலம் வெளிச்சமாக்கி இருக்கிறார், இயக்குநர் வெண்பா கதிரேசன்.
நாளை நமதே – அதிகார வர்க்கத்துக்கு சாட்டையடி.