சினிமா விமர்சனம்: சென்ட்ரல்

அரியலூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் பிளஸ்-2 மாணவரான காக்கா முட்டை விக்னேஷ், குடும்பத்தை நடத்த தனது பெற்றோர் படும் கஷ்டங்களை பார்த்து வேதனை கொல்கிறார். குடும்ப பாரத்தை குறைப்பதற்காக, பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த கையுடன் சென்னைக்கு வேலை தேடி வருகிறார்.
நண்பரின் உதவியால், காட்டன் மில்லில் வேலை கிடைக்கிறது. கனவுடன் சென்ற அவருக்கு, அந்த மில்லில் பல்வேறு கொடுமைகள் அரங்கேறுவது தெரியவருகிறது.
மில் முதலாளியான பேரரசு, சிறிய தவறு செய்தாலும் தொழிலாளர்களை அடிப்பது, எதிர்த்து நின்றால் கொலை செய்வது என்ற கொடூர முகத்தோடு வலம் வருகிறார். குடும்பத்தின் கஷ்டத்தை போக்க வந்த இடத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார், விக்னேஷ்.
அந்த சிக்கலில் இருந்து விக்னேஷ் தப்பித்தாரா? தனது தந்தை ஆசைப்பட்டது போல் படித்து நல்ல பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
எதார்த்தமான நடிப்பால் விக்னேஷ் கலக்குகிறார். சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் இடங்களில் இயல்பான நடிப்பை காட்டி கவருகிறார்.
சோனேஷ்வரிக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பில் கவனம் ஈர்த்துள்ளார்.
கொடூர வில்லனாக பேரரசு பயமுறுத்துகிறார். இனி வில்லனாக அவரை படங்களில் எதிர்பார்க்கலாம்.
சித்தா தர்ஷன், ஆறு பாலா, பாரதி சிவலிங்கம் உள்ளிட்டோர் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இலா இசை படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறது. கிராமத்தின் அழகையும், சென்னை மில்லின் கொடூரத்தையும் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறது வினோத் காந்தியின் கேமரா.
கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம். லாஜிக் மீறல் காட்சிகள் பலவீனம். ஒரு மில்லுக்குள் இத்தனை கொடூரம் நடக்கும்போது அது
குறித்த அங்குள்ளவர்களும், வெளியில் இருப்பவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதை நம்ப முடியவில்லை.
கிராமம், நகரம் இரண்டிலும் ஏழைகள் படும் துன்பத்தையும், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு கனவை பாதியில் விட்டு விடும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படும் துன்பத்தை சொல்லி, கல்வியே அனைத்துக்கும் தீர்வு என்று ஆணியடித்தது போல சொல்லி அசத்துகிறார், இயக்குனர் பாரதி சிவலிங்கம்.
சென்ட்ரல் – சிறு குறைகள் இருந்தாலும் பார்க்கலாம்.