‘சினிமாவில் பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறேன்’- கூலி பட நடிகர் | ‘I’m waiting for a big hit in cinema’

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர், கண்ணா ரவி. வளர்ந்து வரும் நடிகரான இவர், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘வேடுவன்’ என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வெளியாகிறது.
இதுகுறித்து கண்ணா ரவி கூறும்போது, “மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் ‘வேடுவன்’ தொடரும் அடங்கும். இதன் கதையை சொன்ன நொடியே, அது என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்று தீர்க்கமாக நம்பினேன். இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும் கூட நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் எல்லையில் இருந்து வெளியே கொண்டு சென்றுள்ளது.
சினிமாவில் பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் எனக்கு, இதுபோன்ற படங்கள் உந்து சக்தி. கடின உழைப்பு என்னை கரையேற்றும் என தீர்க்கமாக நம்புகிறேன்”, என்றார்.