சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? நடிகை சுவாசிகா ஓபன் டாக்

சென்னை,
தமிழில் ‘வைகை’ படத்தின் மூலமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுவாசிகா. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ‘லப்பர் பந்து’ படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். தொடர்ந்து ‘மாமன்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். , தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
வெப்சீரிஸ், சினிமா என பிசியாக சுற்றி வரும் சுவசிகா அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்கப்பட்டது. இதற்கு சுவாசிகா அளித்த பதில் வருமாறு:
நான் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை அப்படி ஒரு பிரச்சினையை நான் சந்திக்கவில்லை. மேலும் சினிமாவில் மட்டுமே அல்ல, எல்லா துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. வேலைக்கு செல்லாத பெண்களுக்கு, ஏன் சிறுமிகளுக்குக் கூட இங்கே பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவர் நம்மிடம் தவறாக நடக்க முயன்றால், அதை எதிர்கொள்ளவும், அவர்களை சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்கக்கூடாது. இதனை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதுவரை பெண்கள்தான் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.