சாவு என்று வந்தாலே என் பெயரை எழுதுவார்கள் போல” – கலையரசன் | “It’s like they’ll write my name if they think of death

சென்னை,
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம், தற்போது தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கலையரசன், “தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களே கொடுக்கின்றனர். ஆனால் மலையாள சினிமாவில் அப்படி இல்லை. ஒருவர் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடிக்கலாம். தமிழ் சினிமாவிலும் அப்படி இருக்கிறது. ஆனால், குறைவான நடிகர்கள் தான் அப்படி நடிக்கிறார்கள்.
மேலும், ஒரு கதாபாத்திரம் சாகவேண்டும் என்றால் அதை என் பெயரில் எழுதி விடுவார்கள் போல. இனிமேல் குறிப்பிட்ட சில கதைகளில் மட்டுமே துணை நடிகராக நடிப்பேன். மற்றபடி ஹீரோவாக தான் நடிப்பேன்” என கலையரசன் ஆதங்கமாக பேசியுள்ளார்.