சாவுக்கு கண்ணில்லை… நடிகர் மனோஜ் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

சாவுக்கு கண்ணில்லை… நடிகர் மனோஜ் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்


சென்னை,

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மனோஜ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா?.. பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா?… ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா’ என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே; சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா?.. உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?.

“எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா” என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா?… உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா?. முதுமை – மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை. சாவுக்குக் கண்ணில்லை. எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்” என்று தெரிவித்துள்ளர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *