‘சாகும்வரை உதவி செய்துகொண்டே இருப்பேன்’ – நடிகர் பாலா | ‘I will continue to help until I die’

சென்னை,
சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே புகழ் பெற்றவர் பாலா. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ என்ற என்ற படம் வெளியானது. இவர் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
நடிகர் பாலா செய்து வரும் உதவிகளுக்கு ஒருபுறம் மக்களின் ஆதரவு கிடைத்தாலும், அவர் மீது சமீப காலமாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் பாலா இன்று சென்னையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.
அங்கு அவரை காண்பதற்காக வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை கடை ஊழியர்கள் வெகு நேரமாக காத்திருக்க வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்து பாலா உடனடியாக அந்த நபரை சென்று சந்தித்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, பாலா செய்யும் உதவிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதிலளிப்பேன்” என்று கூறினார்.
மேலும், “நீங்கள் செய்து கொண்டிருக்கும் உதவிகள் தொடருமா?” என்ற கேள்விக்கு, “நிச்சயமாக, நான் சாகும்வரை உதவிகளை செய்துகொண்டே இருப்பேன். இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்ததை, நம்மிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று கூறினார்.