சாகச கதைகளில் தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? தேஜா சஜ்ஜாவின் சுவாரஸ்ய பதில்

சென்னை,
‘ஹனுமன்’ படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த தேஜா சஜ்ஜா, தற்போது விஷ்வா பிரசாத் – கிரித்தி பிரசாத் தயாரித்து கார்த்திக் கட்டாம்னேனி இயக்கத்தில் ‘மிராய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக விரைவில் வெளியாகிறது.
இதையொட்டி, சென்னையில் நடந்த பட விழாவில் நடிகர் தேஜா சஜ்ஜா பங்கேற்று பேசுகையில், ‘மிராய்’ என்பதின் பொருள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை. இன்னொரு பொருளும் இருக்கிறது. படத்தில் அது தெரியும். இந்திய மொழிகள் தாண்டி ஜப்பான், சீன மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
சாகச கதைகளில் தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? என்று கேட்கிறார்கள். எனக்குள் ஒரு சிறுவன் இன்னமும் நடமாடிக்கொண்டு இருக்கிறான். எனக்கு பேண்டசி கதைகள் பிடிக்கும். சாகசங்கள் நமது நிஜ வாழ்க்கையில் பார்க்க முடியாது. எனவே தான் படங்களில் அதை செய்கிறேன்.
தமிழில் படங்கள் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நல்ல கதைகள் அமையட்டும். செஞ்சிடுவோம், என்றார்.
அதனைத்தொடர்ந்து ஆன்மிக கதைகளில் தொடர்ந்து நடிக்கிறீர்களே, மத்திய அரசு உங்களை கூப்பிட்டு பதவி தந்தால் ஏற்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ”கொஞ்ச காலம் நடித்துவிடுகிறேன். அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம்”, என்று தேஜா சஜ்ஜா பதிலளித்தார்.