சல்மான் கானை தொடர்ந்து ரஜினிகாந்தை இயக்கும் அட்லீ

சென்னை,
‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். மக்கள் இப்படங்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்திய சினிமாவில் மிக அதீக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 5-வது இடத்தை ஜவான் பிடித்தது. இப்படம் 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அட்லீயின் 6-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் அட்லீ சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் ‘ரஜினியுடன் எப்போது இணைவீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு, “எந்திரன் படத்தின் போது நான் ரஜினி சாருடன் 300 நாட்கள் பணி புரிந்திருக்கிறேன். அவருக்கு என்னை நன்றாக தெரியும். இதுவரை நான் மூன்று முறை அவரை சந்தித்து படம் பற்றி பேசியிருக்கிறேன். சரியான கதையும் நேரமும் கூடிவரவில்லை.
சரியான கதை அமைந்தால் கண்டிப்பாக 100 சதவீதம் நானும் ரஜினி சாரும் ஒன்றாக பணியாற்றுவோம், இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் கண்டிப்பாக என் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிப்பார்” என்று கூறியுள்ளார்.