சல்மான்கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை

மும்பை,
பிரபல இந்தி நட்சத்திரங்களான சல்மான் கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ஹம் சாத் சாத் ஹே என்ற இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது அங்குள்ள காட்டில் வேட்டைக் குச் சென்றதாகவும், இதில் அரிய வகை ‘சிங்காரா’ மான்களை நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சல்மான் கான் மீது வனவிலங்கு தடுப்பு, ஆயுதங்கள் தடை சட்டம் உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகளின் விசாரணை ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது. வழக்கில் இருந்து சைப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இரண்டு நாட்கள் சிறைவாசம் அனுபவித்த சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பிலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல, ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்தும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மான் வேட்டை வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சல்மான் கானுக்கு மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி, ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.