சல்மான்கானின் "சிக்கந்தர்" தோல்விக்கு காரணம் இதுதான்- ஏ.ஆர்.முருகதாஸ்

சல்மான்கானின் "சிக்கந்தர்" தோல்விக்கு காரணம் இதுதான்-  ஏ.ஆர்.முருகதாஸ்


சென்னை,

‘தீனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ்,ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். இந்தியில் இவர் இயக்கிய ‘கஜினி’ படம் 100 கோடி வசூலித்தது. தெலுங்கில் அவர் இயக்கிய ‘ஸ்டாலின்’ வெற்றிப் படமாகவும், மகேஷ் பாபுவை வைத்து இவர் இயக்கிய ‘ஸ்பைடர்’ தோல்விப் படமாகவும் அமைந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது. இப்படக்குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது மாற்றுத்திறனாளிக்கு சமம் என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ், “தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய பலம். ஏனென்றால் தினமும் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதைக் காட்சிகளில் வைக்கும் போது மக்களிடையே ஓர் இணைப்பு இருக்கும். வேறு மொழியில் படம் பண்ணும் போது அன்றைய தினத்தில் என்ன நடக்கிறது, ரசிகர்கள் என்ன ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. வெறும் கதை, திரைக்கதையை நம்பி மட்டுமே படம் பண்ண வேண்டும். அப்படி பார்க்கும் போதுதமிழ் தான் முழு பலம். தெலுங்கும் ஓகேதான். ஏனென்றால் தெலுங்கு நமது மொழி மாதிரி கிட்டதட்ட இருக்கும் என்பதால் கண்டுபிடித்துவிடலாம்.

இந்தி எல்லாம் ஒன்றுமே தெரியாது. ஏனென்றால், தமிழில் எழுதுவோம். அதை ஆங்கிலத்தில் மாற்றி பின்பு இந்தியில் மாற்றி திரையில் வரும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாமே தவிர, சரியாக என்ன பேசுகிறார்கள் என்பதை உணர முடியாது. மொழி தெரியாத ஊரில் படம் பண்ணும் போது, நாம் மாற்றுத் திறனாளி போல் தான் உணர வேண்டும். தாய் மொழியில் படத்தை எடுப்பது போல முழு பலத்துடன் படத்தை இயக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *