சர்வதேச அரங்கில் விருதுகளை வென்ற “புளூ ஸ்டார்” திரைப்படம்

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்‘புளூ ஸ்டார்’. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜெயக்குமார் இயக்கிய ‘புளூ ஸ்டார்’ வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் நடித்த சாந்தனு வென்றுள்ளார்
நடிகர் சாந்தனு இப்படம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘புளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு கதாபாத்திரத்தை விட எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள் மற்றும் அன்பைக் கொடுத்தது. சக நடிகர்கள் , இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவிலுள்ள அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.