"சரண்டர்" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

சென்னை,
சட்டமன்ற தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் சூழலில், சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ‘சரண்டர்’ செய்யப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. அந்தப் பழி போலீஸ்காரர் லால் மீது விழுகிறது. அதேவேளை வாக்காளர்களுக்கு முறைகேடாகப் பணப் பட்டுவாடா செய்ய உள்ளூர் தாதாவான சுஜித்திடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது.
மாயமான கைத்துப்பாக்கியை தேடி சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) தர்ஷன், லால் புறப்படுகிறார்கள். அதேவேளை காணாமல் போன பணத்தை தேடி சுஜித் தனது ஆட்களுடன் நாலாபக்கமும் செல்கிறார். இரு சம்பவங்களும் ஒரு புள்ளியில் இணையும்போது அதிர்ச்சி மேலோங்குகிறது. கைத்துப்பாக்கியும், பணமும் எங்கே போனது? இரு விவகாரங்களுக்கும் உள்ள பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
மிடுக்கான அதிகாரியாக தர்ஷன் கவனம் ஈர்க்கிறார். கோபத்தை அடக்க முடியாமலும், வெளிப்படுத்த முடியாமலும் ஆற்றாமையில் அவர் உடையும் இடம் நல்ல நடிகனுக்கான அடையாளம். அனுபவ நடிப்பை காட்டி ‘ஸ்கோர்’ செய்துள்ளார், லால். வழக்கமான வில்லன் போல இல்லாமல், நுணுக்கமான முக பாவங்களால் ரசிக்க வைக்கிறார், சுஜித்.
பாதினிகுமார், அரோல் சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேசுவரன், கவுசிக், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில் பொறுப்பு தெரிகிறது. முனிஷ்காந்த் மற்றும் அவரது சகாக்களின் காமெடிகள் ஒட்டவில்லை. இருட்டிலும் ஆச்சரியம் தரும் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு, விகாஸ் படிசாவின் இசை படத்துக்கு பலம்.
காவல்துறையில் நடைபெறும் சில தவறுகளை பட்டவர்த்தனமாக காட்டுகிறோம் என்ற பெயரில், காவல்துறையை அரசியல்வாதிகளின் கைப்பாவையாக காட்டியது ஏற்புடையதா? காவல்துறை மீது காட்டம் ஏன்?. யாருமே யூகிக்க முடியாத கதைக்களத்தில் விறுவிறுப்பான திரில்லர் கதையை கொடுத்து ஆச்சரியம் தருகிறார், இயக்குனர் கவுதமன் கணபதி.
சரண்டர் – வேறு வழியில்லை.