"சயாரா" திரைப்படத்தை பாராட்டிய ஜோதிகா

மும்பை,
சூர்யா – ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.இதனையடுத்து சூர்யா – ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் இந்த இணை பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர்.
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த ‘சயாரா’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ‘சயாரா’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி பெரிய ஓபனிங் கொடுத்த 3-வது படமாக ‘சயாரா’ சாதனை படைத்திருக்கிறது. தற்போது உலக அளவில் இப்படம் ரூ 256 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புதுமுகங்கள் மட்டுமே நடித்து வெளியான ஒரு படம் சூப்பர் ஸ்டார் படங்கள் அளவுக்கு வசூல் செய்ததுதான் இப்போது இந்திய சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகை ஜோதிகா ‘சயாரா’ படத்தைப் பாராட்டி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில், “சண்டை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள், ஐட்டம் சாங் என வெளிவரும் படங்களுக்கு மத்தியில், உணர்வுகளையும், இசையையும், தேர்ந்த எழுத்தையும் கொண்டு வந்திருக்கிறது ‘சயாரா’ திரைப்படம். இந்த ஆழமான கதைக்காகவும், மனதைக் கவரும் திரைக்கதைக்காகவும் சகோதரர் சங்கல்ப் சடானாவை பெருமையாக நினைக்கிறேன். மோஹித் சூரி, அனீத், அஹான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உண்மையிலேயே இப்படம் இந்தி சினிமாவின் ஸ்டார்தான்” என்று பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.