சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘வீரவணக்கம்’.
புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது. சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடகராக ‘வீர வணக்க’த்தில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது. அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. புலவர் கலியபெருமாளின் வாழ்க்கை, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’யாக வெளிவந்து தமிழ்ப் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விஜய்சேதுபதியைத் தொடர்ந்து தற்போது சமுத்திரக்கனி காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறி எப்படி கம்யூனிஸ்டாக உருவானார் என்கிற வரலாற்றுப் பின்னணியுடன் வெளியாகவிருக்கும் ‘வீரவணக்கம்’ படத்தில் முதல்முறையாக தோழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனியுடன் பரத் முதல் முறையாக இணைகிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஓர் அபூர்வ திரைப்படம் ‘வீர வணக்கம்’ என்று படத்தை எழுதி, இயக்கியிருக்கும் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன். இப்படத்தில் பரத் தவிர, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
“இடதுசாரிகளின் வரலாற்றில் புரட்சி பாடகியாக கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறுதான் திரைப்படம். ஜாதி கொடுமைகளுக்கும் அதனுடான கொடூர வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம். ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை உறுதியாகத் தரும். ” என இயக்குநர் நம்மிடம் தெரிவித்தார். இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்கிற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த ‘வீரவணக்கம்’ என்கிற படக்குழு.
இந்நிலையில் ‘வீரவணக்கம்’ படம் வரும் 29-ல் திரைக்கு வர உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.