‘கோச்சடையான்’ பட விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு

பெங்களூரு,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அதன்பேரில், லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தார்கள். இதற்கிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரூ.10 கோடி கடன் தொடர்பான வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. பெங்களூரு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.