கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவி| Kerala Actors Association President Post

திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்தார்.
நடிகர் சங்க தலைவர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (AMMA)வின் தலைவியாக, நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி அவர் இந்த பதவியைப் பெற்றுள்ளார். ‘அம்மா’ சங்கத்தின் வரலாற்றில், ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
ஸ்வேதா மேனனின் வெற்றி எளிதாக அமையவில்லை. தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டபோது, சில மூத்த உறுப்பினர்கள் அவருக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அவரது தேர்தல் மனுவில் சில சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அவர் தகுதியற்றவர் என்றும் வாதிட்டனர். ஆனால், அனைத்து சவால்களையும் ஸ்வேதா மேனன் உறுதியாக எதிர்கொண்டார். நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து, தனது தரப்பு நியாயத்தை நிரூபித்து, இறுதியில் தேர்தலில் வெற்றி பெற்றார்.