'கேங்கர்ஸ்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்

'கேங்கர்ஸ்' படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்


சென்னை,

“வின்னர், லண்டன், கிரி, தலைநகரம், நகரம்” படங்களுக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கிய ‘கேங்கர்ஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பள்ளி ஆசிரியையான கேத்ரின் தெரசா, பள்ளியில் இருந்து மாணவி ஒருவர் மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். காவல் துறைக்கு புகார் தெரிவிக்கும் அவர், பள்ளியில் நடக்கும் சில அவலங்களையும் அப்போது குறிப்பிடுகிறார். மாயமாகி போன மாணவியை கண்டுபிடிக்க ரகசியமாக ஒரு போலீஸ் அதிகாரியை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது காவல்துறை. அதன்படி ஆசிரியராக பள்ளிக்கு வரும் சுந்தர் சி பள்ளியில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கிறார். சமூக குற்றங்களில் ஈடுபடுவோரை தனது முகம் தெரியாமல் அடித்து நொறுக்குகிறார்.

இதற்கிடையில் சுந்தர் சி யை பழிவாங்க பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ஹரீஷ் பேரடி வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். ஒரு கட்டத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரி இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. சுந்தர் சி ஏன் பள்ளிக்கு வந்தார்? மாயமாகி போன மாணவியின் கதி என்ன? சுந்தர் சி – ஹரிஷ் பேரடி இடையே என்ன பிரச்சினை? என்பது மீதிக்கதை.

ஆறடி உயர தோற்றமும், கனிவான பேச்சும் என சுந்தர் சி கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எதிரிகளை பந்தாடும் காட்சியில் வியக்க வைக்கிறார். ஜனரஞ்சகமான அவரது நடிப்பு படத்தை தாங்கி பிடிக்கிறது. சுந்தர் சிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க ஜொலிக்கிறார் வடிவேலு. அவரது டைமிங் காமெடியும், பாடி லாங்குவேஜ்-ம் பழைய வடிவேலுவை நினைவூட்டுகிறது.

அழகான கதாநாயகியாக கேத்ரின் தெரசா மிளிர்கிறார். பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிக்க வைக்கிறார். ஹரிஷ் பேரடி வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோரும் மிரட்டும் நடிப்பால் கவனிக்க வைக்கிறார்கள். சிறிது நேரமே வந்தாலும் வாணி போஜன் அனுதாபத்தை அள்ளி விடுகிறார். சந்தன பாரதி, விச்சு, பக்ஸ், முனிஸ்காந்த், பிரபாகர், மதுசூதனன், ரிஷி உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கிறது. சத்யாவின் இசை படத்துடன் ஒன்றச் செய்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம். லாஜிக் மீறல்கள் பலவீனம். விறுவிறுப்பான திரைக்கதை பலம். காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, அதிரடி, கிளாமர் என தனக்கே உரிய பாணியில் ரசிக்கும்படியான திரைக்கதையில் படத்தை நகர்த்தி மீண்டும் முத்திரை பதித்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி. 

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *