‘கூரன்’ திரை விமர்சனம் | ‘Kooran’ movie review

சென்னை,
அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி வைத்து நாயை மையமாக வைத்து இயக்கியுள்ளபடம் ‘கூரன்’ . இதில் எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கூரன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
கொடைக்கானலில் ஜான்சி என்ற நாய் தனது குட்டியுடன் சாலையில் செல்லும்போது போதையில் வேகமாக கார் ஓட்டி வரும் இளைஞன் குட்டி நாய் மீது காரை ஏற்றிக் கொன்று விட்டு சென்று விடுகிறான். தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போலீஸ் நிலையம் செல்லும் நாய் போலீசாரால் விரட்டி அடிக்கப்படுகிறது. பிறகு வக்கீல் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டுக்கே சென்று குட்டியை இழந்த தனது சோகத்தை உணர வைக்கிறது. தாய் நாயின் வலியை புரிந்து கொள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர் கோர்ட்டுக்கு சென்று தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க போராடுகிறார். வழக்கில் அவர் வெற்றி பெற்றாரா ? என்பது மீதி கதை.
நேர்மையான வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார். தெளிவான வசன உச்சரிப்பு, மிடுக்கான நடை, இயல்பான நடிப்பு என கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் சேர்க்கிறார். நாய்க்குட்டியை கொன்றவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வாதாடும் காட்சிகள் அவரது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறது.
கவிதா பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், சத்யன், இந்திரஜா ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. பார்வையற்றவராக வரும் ஜார்ஜ் மரியான் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்துகிறார். ஜென்சியாக வரும் நாய், குட்டியை இழந்த சோகத்தையும் கோபத்தையும் முகத்தில் நுணுக்கமாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறது. மார்டின் தன்ராஜின் கேமரா, கொடைக்கானல் அழகை அள்ளியுள்ளது. சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு ஒன்ற செய்கிறது.
குட்டியின் மரணத்துக்காக நீதி கேட்டு தாய் நாய் மேற்கொள்ளும் பாச போராட்டம் படத்தின் பலம். நாடகத்தனமான சில காட்சிகள் பலவீனம். சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற கருத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆழமான திரைக்கதை, வசனத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் நிதின் வேமுபதி.