"குயிலி" சினிமா விமர்சனம்

சென்னை,
எளிய குடும்பத்தில் பிறந்த தஷ்மிகா, ரவிசாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். வாழ்க்கை ஆனந்தமாக சென்றுகொண்டிருக்க, ரவிசா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி போகிறார். இதனால் குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது. இதற்கிடையில் மதுக்கடையில் நடக்கும் அடிதடியில் ரவிசா கொல்லப்பட, வெகுண்டு எழும் தஷ்மிகா அந்த மதுக்கடையை எரித்து விடுகிறார்.
வருடங்கள் உருண்டோட, தஷ்மிகா லிசி ஆண்டனியாக மாறி போகிறார். மதுக்கடைகளை எதிர்த்து போராடி வருகிறார். லிசி ஆண்டனியின் மகன் கலெக்டராகி, ஒரு மதுபான ஆலை உரிமையாளரின் மகளை மணமுடிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் லிசி ஆண்டனி எடுக்கும் முடிவு என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை. முற்பாதியில் குயிலியாக வரும் தஷ்மிகாவின் நடிப்பில் காதல், திருமணம், குடும்பம் என எதார்த்தமான வாழ்வியலை காணமுடிகிறது.
பிற்பாதியில் குயிலியாக வரும் லிசி ஆண்டனி போராட்டக்காரராக கவனம் ஈர்க்கிறார். ஒருகட்டத்தில் மகனை எதிர்த்து போராடும்போது, அவரது போராட்டக்குணம் கவனிக்க வைக்கிறது. ரவிசா, புதுப்பேட்டை சுரேஷ், அருண்குமார் என கதாபாத்திரங்களின் எதார்த்த நடிப்பு சிறப்பு.
பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு ஓரளவு ரசிக்க வைக்கிறது. ஜோ ஸ்மித்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம். நடிகர்-நடிகைகளின் நேர்த்தியான நடிப்பு கைகொடுத்திருந்தாலும், அழுத்தமில்லாத காட்சிகள் சுணக்கம் தருகின்றன. இரண்டாம் பாதியில் கதையின் நகர்வு தடம் மாறிவிட்டது.
மது போதைக்கு அடிமையாகி விட்டால், அவர்களின் வாழ்வு எப்படியெல்லாம் திசைமாறும்? என்பதை எதார்த்த காட்சிகளின் கோர்வையாக கொடுத்து படத்தை இயக்கியுள்ளார், முருகசாமி.
குயிலி – இனிமை தேவை.