‘குபேரா’ படத்திற்காக தனுஷ் இன்னொரு தேசிய விருதை பெறுவார் – சேகர் கம்முலா | Dhanush will receive another National Award for ‘Kubera’

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் “தேவா” என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷ் குறித்து பேசி உள்ளார். அதாவது, “குபேரா படம் நல்லா வந்திருக்கு. இந்த படத்திற்காக தனுஷ் இன்னொரு தேசிய விருதை பெறுவார் என்று நினைக்கிறேன். அவரை தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரை செய்திருக்க முடியாது. இது பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள ஒரு சமூக அரசியல் திரில்லர் படமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம் மற்றும் அசுரன்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.