"குபேரா" படத்தால் நாகார்ஜுனாவுக்கு ஜப்பானில் வரவேற்பு

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ”குபேரா” படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியான ‘குபேரா’ படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்தது. தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படம் ரூ.129 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் நாகார்ஜுனாவின் நடிப்பு இந்தியாவில் மட்டுமில்லாமல் ஜப்பானிலும் பெரிதாக பேசப்பட்டுள்ளது. ஜப்பான் மக்கள் ‘நாக்-சமா’ என பெயர்வைத்து அழைக்கும் அளவிற்கு நாகார்ஜுனாவிற்கு புகழ் கிடைத்துள்ளது.
குபேரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நாகார்ஜுனா ஜப்பானில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அங்குள்ள சினிமா ரசிகர்கள் இவரை ‘நாக்-சமா’ என்று அன்புடன் அழைக்கின்றனர். ‘சமா’ என்பது ஜப்பானிய கலாச்சாரத்தில் கடவுள்கள் அல்லது மிகவும் மதிக்கப்படுபவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
கடந்த மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படத்தில் தீபக் என்ற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள விதம், ஜப்பானிய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏற்கெனவே பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், நாகார்ஜுனாவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.