"குட் டே" திரைப்பட விமர்சனம்

சென்னை,
பிரித்விராஜ் தனது குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அங்கு பெண்ணிடம் அத்துமீறும் மானேஜரை கண்டித்ததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். சம்பளமும் தடைபடுகிறது. சோகத்தில் மது குடிக்கும் பிரித்விராஜ், தனது பழைய காதலி வீட்டுக்கு சென்று பிரச்சினையில் சிக்குகிறார். போலீசாரிடம் பிடிபடுகிறார்.
போலீஸ் நிலையத்தில் ஒரு குழந்தை காணாமல் போன புகாரில் போலீசார் பிசியாக இருக்கும்போது, இன்ஸ்பெக்டரின் சீருடை மற்றும் வாக்கிடாக்கியை எடுத்துக்கொண்டு ‘எஸ்கேப்’ ஆகிறார், பிரித்விராஜ். பிரித்விராஜிடம் இருந்து சீருடை மற்றும் வாக்கிடாக்கியை போலீசார் கைப்பற்றினார்களா? காணாமல் போன குழந்தையை மீட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
குடிகாரரின் நடை, பேச்சு, உடல்மொழியை அச்சு பிசகாமல் பிரதிபலித்து, கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார், பிரித்விராஜ். இயல்பான அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. கல்லூரி தோழியாக வரும் மைனா நந்தினி கலகலப்பூட்டுகிறார். அவருக்கான காட்சிகளை இன்னும் சேர்த்திருக்கலாம்.
மைனா நந்தினியின் கணவராக ‘ஆடுகளம்’ முருகதாஸ், இன்ஸ்பெக்டர் ஜீவா சுப்பிரமணியம், ஆட்டோ டிரைவர் காளி வெங்கட், பக்ஸ், போஸ் வெங்கட், வேல ராமமூர்த்தி என கதாபாத்திரங்கள் அனைவருமே நினைவில் நிற்கிறார்கள்.
மதன் குணதேவின் ஒளிப்பதிவு கதையுடன் பயணிக்க வைக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் தேவை. யூகிக்க முடியாத திரைக்கதை பலம். கதைக்கு பொருந்தாத காட்சிகள் பலவீனம்.
மதுவுக்கு அடிமையானவர்களின் மனநிலையால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை, அனுபவ ரீதியாக கதை சொல்லி, எதார்த்த படைப்பாக கொடுத்துள்ளார், இயக்குனர் என்.அரவிந்தன். கிளைமேக்ஸ் காட்சி உணர்ச்சிபூர்வமானது.
குட் டே – எல்லா நாளும்…