கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக்கூடாது- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக்கூடாது- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சென்னை,

திவாலானவர் என்று அறிவிக்கப்பட்ட மறைந்த தொழிலபதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கியிருந்தார். தற்போது அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என்ற நிலை இருப்பதால் அவரது சொத்துகளை சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் இருந்து ஞானவேல்ராஜா வாங்கிய, கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது.

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. கடன் தொகை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், இந்த படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.

ஆனால், ஞானவேல்ராஜா தரப்பில், ரூ.3 கோடியே 75 லட்சம் மட்டும் செலுத்த முடியும். படத்தை வெளியிடவில்லையென்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்காத நீதிபதிகள், “ஒரே தவணையில் கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்துவது குறித்து ஞானவேல்ராஜாவுக்கு பல வாய்ப்புகள் இந்த ஐகோர்ட்டு வழங்கியும், அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன்பின்னரும் அவருக்கு சலுகை வழங்கத்தேவையில்லை. எனவே, கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக்கூடாது. ஏற்கனவே, விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *