கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 என்ற திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நலன் குமாரசாமி அப்படத்தின் மூலமாக தனி கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய காதலும் கடந்து போகும் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்பது போன்ற பேச்சுகள் அடிபட்டது. ‘வா வாத்தியார்’ படம் டிசம்பரில் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.