“காந்தாரா சாப்டர் 1” பட போலி போஸ்டர் விவகாரம்: ரிஷப் ஷெட்டி கொடுத்த விளக்கம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் சுமார் 55 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் நிகழ்ச்சியின் போது நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 படம் பற்றி வெளியான போலி போஸ்டர் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, அந்த போலி போஸ்டரில் திரையரங்குகளில் காந்தார சாப்டர் 1- ஐப் பார்க்கும் வரை மது அருந்தாமல், புகைப்பிடிக்காமல், அசைவம் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு விளக்கம் கொடுத்த ரிஷப் ஷெட்டி, “இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது.” என்று கூறியுள்ளார்.