“காந்தாரா சாப்டர்-1” படத்தின் “ரெபெல்” பாடல் வெளியீடு

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா – சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நிலவுரிமை பிரச்னைகளைத் தொட்டு கதை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. காட்சியமைப்புகளும் இசையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா – சாப்டர் 1’ மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘என்னை ஆளும் சிவனே’ சமீபத்தில் வெளியானது.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற இருந்த ‘காந்தாரா சாப்டர்1’ பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து ‘காந்தாரா சாப்டர்1’ பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர்1’ படத்தின் ‘ரெபெல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
‘காந்தாரா சாப்டர்1’ படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.