காதலர் குறித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகை உருக்கமான பதிவு

மும்பை,
பிரபல சின்னத்திரை நடிகை ஹினா கான், இந்தி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக இவர் நடித்த ‘யே ரிஷ்டா கியா கெஹ்லாதா ஹை’ என்ற தொலைக்காட்சி தொடர் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியில் ‘பிக் பாஸ்’, ‘கத்ரோன் கி கிலாடி’ உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஹினா கான் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் 36 வயதான ஹினா கான், தனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிவித்தார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தனக்கு மார்பக புற்றுநோய் 3-ம் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ஹினா கான் தனது காதலர் ராக்கி ஜெய்ஸ்வால் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னை, தனது காதலர் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து கவனித்துக் கொள்கிறார் என்று ஹினா கான் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“நான் சிகிச்சைக்காக மொட்டையடித்தபோது அவரும் தனது தலையை மொட்டையடித்தார். எனக்கு மீண்டும் முடி வளர தொடங்கிய பிறகுதான் அவர் முடி வளர்த்துக் கொண்டார். எனது ஆன்மாவை கவனித்துக் கொள்ளும் நபர் அவர்.
என்னை விட்டுச் செல்வதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருந்தாலும், அவர் எப்போதும் எனது பக்கத்திலேயே இருக்கிறார். என்னை கவனித்துக் கொள்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்த தன்னமலமற்ற மனிதர்.
நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக நிற்கிறோம். கொரோனா தொற்று காலத்தில் கடினமான சூழ்நிலைகளை ஒன்றாக கடந்து வந்தோம். நாங்கள் இருவரும் எங்கள் தந்தைகளை இழந்து அழுதபோது ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்திக் கொண்டோம்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து, எனது சிகிச்சை தொடங்கிய நாளில் இருந்து, இன்று வரை எனது வாழ்க்கையின் வழிகாட்டும் ஒளியாக அவர் இருந்து வருகிறார். என்னை சுத்தப்படுத்தி, ஆடை அணிவிப்பது வரை அனைத்தையும் அவர் செய்துள்ளார். எனக்கு ஒரு வலிமையான பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்.
எனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த விஷயம் அவர்தான். இதயத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு நன்றி கூறுகிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், ஒருவரின் கண்ணீரை மற்றொருவர் துடைத்திருக்கிறோம். இதை வாழ்நாள் முழுவதும் செய்வோம். அவர் உண்மையில் கடவுளின் ஆசீர்வாதம். அவரைப் போன்ற ஆசீர்வாதம் அனைத்து பெண்களுக்கும் அமைய வேண்டும்.”
இவ்வாறு ஹினா கான் தெரிவித்துள்ளார்.