“கல்கி 2” படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

தீபிகா படுகோன் தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம், உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக அமைந்தது. மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2898 திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகை தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தீபிகா படுகோன் நீக்கப்பட்டதற்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தீபிகா தரப்பிலிருந்து தயாரிப்பு தரப்புக்கு வைக்கப்பட்ட நிபந்தனைகளே அந்த நீக்கத்திற்கு காரணமாம். முக்கியமாக, தீபிகா படுகோன் நாளொன்றுக்கு 7 மணி நேரம்தான் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். மேலும், முதல் பாகத்தின் சம்பளத்தைவிட 25 சதவீதம் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடன் வரும் 25 பேர் கொண்ட குழுவினருக்கு சம்பளம் உள்பட பிற செலவுகளையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், தீபிகா படுகோனை நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது