‘கலன்’ பட திரை விமர்சனம் | ‘Kalan’ movie screen review

‘கலன்’ பட திரை விமர்சனம் | ‘Kalan’ movie screen review


சென்னை,

இயக்குனர் வீரமுருகன் எழுதி இயக்கி கடந்த 3-ந் தேதி வெளியான திரைப்படம் ‘கலன்’. இந்த படத்தில் அப்புக்குட்டி, தீபா, யாசர், சம்பத்ராம், காயத்ரி, சேரன்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜலட்சுமி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜெர்சன் இசையமைத்துள்ளார். போதை பொருள்கள் குறித்து சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் ‘கலன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

யாசர் தனது தாய் தீபா சங்கர் மற்றும் மாமன் அப்புக்குட்டியுடன் வசிக்கிறார். கஞ்சா விற்கும் கும்பலில் வேலை செய்யும் தனது நண்பன் ஒரு பிரச்சினையில் சிக்க அந்த கும்பலோடு மோதுகிறார் யாசர். இதைத் தொடர்ந்து கஞ்சா விற்கும் கும்பல், யாசரை அவரது நண்பன் உதவியோடு கொலை செய்கிறது. மகன் படுகொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்க தீபா சங்கரும், அப்புக்குட்டியும் திட்டம் போடுகிறார்கள். பழி வாங்கினார்களா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

தாயாக வரும் தீபா சங்கர் மகன் மீது பாசம், மகனை கொன்றவர்களை பழிதீர்க்க ஆவேசம் என அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். யாசர், சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

தாய் மாமனாக வரும் அப்புக் குட்டி, சகோதரி மகனைகொன்றவர்களை தீர்த்துக்கட்டும் காட்சிகளில் மிரள வைத்துள்ளார். பெண் தாதாவாக வரும் காயத்ரி, கையில் சுருட்டு, போதை என நடிப்பில் மிரட்டுகிறார். கஞ்சா கும்பல் தலைவனாக வரும் சம்பத் ராம், வில்லத்தனத்தில் கவனம் பெறுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் நடிப்பு சிறப்பாக உள்ளது .

சில காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிவது பலகீனம். ஜெர்சன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கூடுதல் பலம். ஜெயக்குமார், ஜேகே ஆகியோரின் கேமரா மூலை முடுக்குகளில் சுழன்று காட்சிகளை படமாக்கி இருப்பது சிறப்பு. பழி வாங்கும் கதையை கஞ்சாவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அதிரடியாகவும் விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் வீரமுருகன்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *