கமலுக்கு எதிராக அவதூறு பரப்புவதா? – தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்

‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளநிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் பேசிய கமல்ஹாசன், ‘ தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்’ என்று கூறியிருந்தார். இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முதல்- மந்திரி சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல் பதிலளித்தார். இதற்கிடையில், கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ‘தக் லைப்’ படம் கர்நாடகாவில் வெளியாகாது என்று கர்நாடகா திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு கூறினார்.
இன்று செய்தியாளர் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில்,”இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மாட்டேன்” என்றார்.
இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதட்டமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.