கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை – நடிகர் சிவராஜ்குமார் பேட்டி | I don’t agree with Kamal Haasan’s opinion on Kannada language

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை – நடிகர் சிவராஜ்குமார் பேட்டி | I don’t agree with Kamal Haasan’s opinion on Kannada language


பெங்களூரு,

தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருந்தார். இதனால் கன்னட மொழியை நடிகர் கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கூறி, கர்நாடகத்தில் அவருக்கு எதிராக கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வருகிற 5-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக சினிமா வர்த்தகசபை அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காமல் இருக்க முடியாது. அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகத்தில் கமல்ஹாசன் படத்திற்கு தடை விதிக்கப்படும். அதுபற்றி கன்னட சினிமா வர்த்தக சபை தலைவருடனும் பேசியுள்ளேன். இந்த விவகாரம் பற்றி முதல்-மந்திரி சித்தராமையாவுடன் பேசிவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று பெங்களூருவில் நேற்று கன்னடம் மற்றும் கலாச்சார துறை மந்திரி சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு நடிகர் சிவராஜ்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார். நடிகர் கமல்ஹாசனின் ரசிகன் நான் என்றும், அவர் பேசியதை பெரிதுப்படுத்துகிறார்கள் என்றும் சிவராஜ்குமார் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதை நான் சரி என சொல்லவில்லை. கன்னடம், தமிழ் குறித்து பேசும் போது இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நான் கைதட்டியது உண்மை தான். அந்த சந்தர்ப்பத்தில் கன்னட மொழி குறித்து அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது. எனது தந்தை கன்னட மொழி மீது வைத்திருந்த பற்று குறித்து உங்களுக்கு நன்கு தெரியும்.

நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, மேடையில்அமர்ந்திருந்த நான், அங்கேயே இதுபற்றி பேசாதது குறித்து கேட்கிறீர்கள். அவர் பேசியது சரியாக கேட்கவில்லை. கன்னட மொழி குறித்து பேசியது குறித்து கமல்ஹாசனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன பேசினார் என்பதை 2-வது முறையாக கேட்ட போது தான் எனக்கே புரிந்தது. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *