கதாநாயகனாக நடிக்கும் ஆசை உள்ளதா? ரெடின் கிங்ஸ்லி ஓபன் டாக்

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், ரெடின் கிங்ஸ்லி. ‘டாக்டர்’, ‘அண்ணாத்த’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி தற்போது நிவின் பாலி படத்தில் நடித்து வருகிறார். ரெடின் கிங்ஸ்லி அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
ரெடிங் கிங்ஸ்லி கூறியிருப்பதாவது: இயக்குனர் நெல்சனை கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்குத் தெரியும். அப்போது நான் நடனப்பள்ளி வைத்திருந்தேன். அவருடைய கல்லூரி கலைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடனம் கற்றுக்கொள்ள என்னிடம் வந்தார். அவருக்கு நான்தான் நடனப்பயிற்சி அளித்தேன். அதில் அவர் முதல் பரிசையும் பெற்றார். அது முதல் நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருந்து வருகிறோம்.
கோல மாவு கோகிலா படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து நெல்சன் ‘வேட்டை மன்னன்’ என்ற ஒரு படத்தை இயக்கினார். பல காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. அந்தப் படத்தில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை அவர் வைத்திருந்தார். என் நேரமோ, எதுவோ தெரியவில்லை. அந்தப் படம் வெளியாகவில்லை. அதன்பிறகுதான் ‘கோலமாவு கோகிலா’ பட வாய்ப்பை நெல்சன் எனக்கு தந்தார்.
இப்போது நன்றாகத்தானே போய் கொண்டிருக்கிறது. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். நான் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த முகத்தை, இந்த உயரத்தை கேட்கும் கதையில், அந்த கதையின் நாயகனாக வேண்டுமானால் நான் நடிக்கலாம்.