‘கண்நீரா’ பட விமர்சனம் | ‘Kanneera’ movie review

‘கண்நீரா’ பட விமர்சனம் | ‘Kanneera’ movie review


சென்னை,

மலேசிய தமிழர்கள் உருவாக்கியுள்ள படம், ‘கண்நீரா’. மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். இதில் சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹரிமாறன் இசை அமைத்துள்ளார். ஏகணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தநிலையில் ‘கண்நீரா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சொந்த தொழில் நிறுவனம் நடத்தும் கதிரவென் தனது காதலி சாந்தினி கவுரை உடனடியாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். சாந்தினியோ சுயமாக நிறைய சம்பாதித்து முன்னேறிய பிறகே திருமணம் என்று தள்ளிப் போடுகிறார். இது அவர்களுக்குள் பிளவை உண்டாக்கி பிரிகிறார்கள்.

இன்னொரு புறம் கதிரவென் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் மாயா கிளம்மி எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவுகள் கம்பெனி வளர்ச்சிக்கு உதவுகிறது. அவரது காதலன் வெளிநாடு போய் வேலை பார்க்கும் முடிவோடு காதலியையும் தன்னோடு வரும்படி அழைக்கிறான். மாயா கிளம்மிக்கு வெளிநாடு போக விருப்பம் இல்லை. இந்த சூழலில் மாயா கிளம்மி மீது கதிரவெனுக்கு காதல் வருகிறது. அவரோ ஏற்கனவே ஒருவரை விரும்புவதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் கதிரவென் பிடிவாதமாக ஒருதலை காதலை தொடர்கிறார். அவரது காதல் கைகூடியதா? என்பது மீதி கதை.

கதிரவென் ஸ்டைலான நடை, உடை பேச்சு என்று கதாபாத்திரத்துக்கு நிறைவை சேர்த்து கவனிக்க வைக்கிறார். காதலியை பிரிந்ததும் விரக்தி, இன்னொரு பெண் மீது மீண்டும் காதல், அதுவும் தோல்வியில் முடிய சோகம் என்று உணர்வுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

இன்னொரு நாயகனாக வரும் நந்தகுமார் தாழ்வு மனப்பான்மை, காதலி மீது கோபம் என்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாந்தினி கவுர் காதலன் விருப்பத்தை ஏற்க முடியாமலும் பிரிய முடியாமலும் தவிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். மாயா கிளம்மி இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

காட்சிகளின் நீளம் வேகத்தடை. ஹரிமாறன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஏகணேஷ் நாயர் கேமரா மலேசிய அழகை அள்ளியதோடு கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்த்துள்ளது. இரு ஜோடிகளின் முரண்பட்ட காதல் சிக்கல்களை திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் கதிரவென்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *