ஒரு ஹீரோ மீது தனக்கு இருந்த கிரஸை நடிகை வெளிப்படுத்தினார். |Actress maheswari says she had crush on actor ajith kumar during ullaasam days

சென்னை,
நடிகை மகேஸ்வரியை நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். சமீபத்தில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கி வரும் ”ஜெயம்மு நிச்சயம்முரா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஒரு ஹீரோ மீது தனக்கு இருந்த கிரஸை வெளிப்படுத்தினார். மகேஸ்வரி கூறுகையில், ‘எனக்கு நடிகர் அஜித் மீது கிரஸ் இருந்தது. அதற்கு மேல் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருடன் இரண்டு படங்கள் நடித்துள்ளேன்.
அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒன்றரை வருடங்கள் நீடித்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் எதிர்பாராத ஒன்று நடந்தது. நான் அவரை மீண்டும் ஒருபோதும் சந்திக்க முடியாதே என்ற சோகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து, “மஹி, நீ என் தங்கை போல. உனக்கு எப்போது, எது தேவைப்பட்டாலும், என்னிடம் கேள். நான் உனக்காக இருக்கிறேன்” என்றார்.
மகேஸ்வரி, 1994 ஆம் ஆண்டு கருத்தம்மா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். உல்லாசம் மற்றும் நேசம் ஆகிய படங்களில் அஜித்துடன் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.