ஏ.ஐ. மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன 'ராஞ்சனா': தனுஷ் எதிர்ப்பு

சென்னை,
கடந்த 2013ம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தியில் நாயகனாக அறிமுகமான படம் ‘ராஞ்சனா’. இந்த படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது. அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த திரைப்படம் திரைக்கு வந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ரீ-ரிலீஸ் செய்தனர். இந்த படத்தின் கிளைமேக்சை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் மாற்றி வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான ஆனந்த் எல்.ராய் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றியோ, கிளைமேக்சை மாற்றுவது குறித்தோ என்னிடம் எதுவும் கேட்காமலேயே மாற்றி வெளியிட்டு எனது படைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள். மன உளைச்சலில் உள்ளேன். இது புதுமை அல்ல அவமானம் என்று அப்படக்குழுவை குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் ஏ.ஐ. மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன ராஞ்சனா படத்திற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
AI மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமாக்சுடன் வந்துள்ள ராஞ்சனா படம், என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது.
இந்த மாற்று முடிவு, படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, சம்பந்தப்பட்ட தரப்பினர் என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர்.
12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன ராஞ்சனா இது இல்லை.
திரைப்படங்களையோ அல்லது உள்ளடக்கத்தையோ மாற்ற ‘ஏ.ஐ’ பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் மிகவும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.
AI மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள், சினிமாவை அச்சுறுத்துகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சனா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘அட்ரங்கி ரே’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தற்போது ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.